search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்னாள் ராணுவ மந்திரி"

    முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். #Edappadipalaniswami #MKStalin #GeorgeFernandes
    சென்னை:

    முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் உடல் நலக்குறைவால் இன்று காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

    ஜார்ஜ் பெர்னாண்டஸ் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர். இவர் சமதா கட்சியை தோற்றுவித்தவர். பின்னர் ஜனதா தளம் கட்சியில் பல முக்கிய பதவிகளையும், பொறுப்புகளையும் வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஒன்பது முறை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு திறம் பட செயலாற்றியவர் என்ற பெருமைக்குரியவர்.

    அரசியல்வாதி, தொழிற் சங்கத்தலைவர், பத்திரிகையாளர் போன்ற பன்முகத் தன்மை கொண்டவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ். சிறந்த நிர்வாகியாகவும் கடின உழைப்பாளியாகவும், அனைவரிடமும் அன்பாக பழகும் தன்மையுடையவராகவும் திகழ்ந்தார்.

    இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசின் மறைவு இந்தியாவிற்கே ஒரு பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-



    முன்னாள் இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சரும், மூத்த தொழிற் சங்கத்தலைவருமான ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைந்து விட்டார் என்ற துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரது மறைவிற்கு தி.மு.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சோசலிச உணர்வுகளின் ஊற்றுக்கண்ணாகத் திகழ்ந்த ஜார்ஜ் பெர்னாண்டசின் “ரெயில்வே தொழிற்சங்க வேலை நிறுத்தம்” இன்றைக்கும் தொழிலாளர்கள் மனதை விட்டு அகலாத ஒரு பசுமையான புரட்சிகர வரலாற்று நிகழ்வு. நெருக்கடி நிலையை எதிர்த்து கடுமையாகப் போராடிய அவர், தமிழகத்தில் கலைஞர் தலைமையில் நடைபெற்ற கழக ஆட்சியில் ஜனநாயகக் காற்றைச் சுவாசித்தவர் மட்டுமல்ல கலைஞருக்கு இறுதிவரை உற்ற நண்பராக இருந்தவர். பிறகு கைது செய்யப்பட்ட அவர் சிறையிலிருந்தவாறே மக்களவைக்கு அமோக மக்கள் ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டு, பிரதமர் மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் தொழில் துறை அமைச்சரானவர். பிறகு வி.பி.சிங் அமைச்சரவையில் ரெயில்வேதுறை அமைச்சராகவும், வாஜ்பாய் அமைச்சரவையில் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்று சிறப்பாகப் பணியாற்றியவர். கார்கில் போரில் இந்திய வெற்றிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர் என்பதை யாரும் மறந்திட இயலாது.

    ஏழைகளுக்காகவும், தொழிலாளர்களுக்காகவும் வர்க்க உணர்வுடன் தொடர்ந்து போர்க்குரல் எழுப்பிய ஜார்ஜ் பெர்னாண்டஸ் , தன் வாழ்நாள் முழுவதும் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக ஓயாது பாடுபட்டவர். அவர் விட்டுச் சென்றுள்ள மகத்தான பணிகள் தொழிலாளர் வர்க்கம், அடித்தட்டு மக்கள், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டோர் மத்தியில் என்றைக்கும் நீங்காப் புகழுடன் நிலைத்திருக்கும். “மாபெரும் மக்கள் தலைவர்” ஒருவரை இழந்து தவிக்கும் அவரது உறவினர்களுக்கும், தொழிலாள தோழர்களுக்கும்,சோசலிச சிந்தாந்த ஆர்வலர்களுக்கும் எனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேலும் தி.மு.க. சார்பில், டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., ஜார்ஜ் பெர்னாண்டஸ் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்துகிறார்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #Edappadipalaniswami #MKStalin #GeorgeFernandes #RIPGeorgeFernandes
    நீண்டகாலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த, முன்னாள் ராணுவ மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டஸ் டெல்லியில் இன்று காலமானார். #GeorgeFernandes #RIPGeorgeFernandes
    புதுடெல்லி:

    கர்நாடக மாநிலம் மங்களூரில் பிறந்தவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ். சமதா கட்சியின் நிறுவனரான இவர் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்புத்துறை மந்திரியாக பணியாற்றியவர். அவரது பதவிக்காலத்தில்தான் கார்கில் போர் நடந்தது. போக்ரான் அணு ஆயுத சோதனை நடத்த வேண்டும் என்பதை வெளிப்படையாக ஆதரித்தவர்.



    வி.பி.சிங் ஆட்சிக்காலத்தில் ரெயில்வே மந்திரியாக ஜார்ஜ் பெர்னாண்டஸ் பதவி வகித்தார். மொரார்ஜி தேசாய் அமைச்சரவையிலும் அமைச்சராக பணியாற்றினார். கடைசியாக 2009 ஆகஸ்ட் முதல் 2010 ஜூலை மாதம் வரை மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றினார்.

    அதன்பின்னர் முதுமைசார்ந்த உடல்நலக்குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிய ஜார்ஜ் பெர்னாண்டஸ் (வயது 88), நீண்டகாலமாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், டெல்லியில் இன்று ஜார்ஜ் பெர்னாண்டஸ் காலமானார். #GeorgeFernandes #RIPGeorgeFernandes

    ×